உணவின் அருமை அறியாது
உன்னதமான என்னை அன்று
உதாசீனமாய் வீசி எறிந்தாயே
சேற்றோடு போராடுபவனின்
உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட
செந்நெல் நான்- இன்று
என் ஏளனப்பார்வைக்கு முன் நீ
சிறுமையை விஞ்சிய சிறுமை
கொரோனா என்னும் பெயரால்
காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை
அன்று நீ என்னை வீசினாய்
இன்று எனக்காக ஏங்குகின்றாய்
இத்தனை யுகங்களாக என்னை
இரைத்து எறிந்தது போதும்
நாளைய உலகை நீ காண
இக்கனமே என்னை பூமித்தாயோடு
இணையச்செய்வாய்
நாளை உன் பசிப்பிணிக்கு
நானே மருந்தாக உதிப்பேன்.
Comments
Post a Comment