உள்ளொளி சுடர் மூட்டி உன் விழி தனில் ஏற்றி அறிவால் உயரும் கோபுரம் செய்-அதில் பெண்ணவள் கண்ட அவமானம் நெய் சாதிகள் சாஸ்திரங்கள் கற்பிதம் இயம்பும் சட்டங்களை விட்டொழித்து அதிகார கூண்டின் மேலேறி கர்ஜனை செய்! உன் விதி எழுது(ம்)கோலை மாற்றான் வசமிழக்காதே உன்னை நீயே துணிந்து எழுது! உன் தேவை மீதேறி பயணப்படு வழியில் மிடரும் கற்களின் மேல் புன்னகை அணி பயம் செதுக்கும் உருவில் உயிர் நிரப்பி உன் வீரியத்தை கொள்ளியிடாதே.. உன் இணைக்கும் மதிப்பளி அன்பால் அடைகாக்கும் போர்குண இறக்கைகள் இயற்கை உனக்களித்த செல்வம் தோழி! சட்டங்களை நீ கூவு சண்டாளனை கண்டால் ரௌத்திரம் பேசு படிப்பால் பாதை செய்-அதில் பண்பால் உன் குலம் நீவு பரந்த வெளியில் உன் சுதந்திரம் போற்று அடிமை செய்யும் களைகளின் முன் நீயே ஆயுதமாகு எப்போதும் முழக்கமிடு.. தேசத்தின் எழுச்சிதனை சிரம் ஏற்று சிறகடி..! By Nivejiththa. A